கோத்தபாயவின் எண்ணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஊடக வலையமைப்பு ஒன்றின் உரிமையாளரான வர்த்தகர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தபாய ராஜபக்ச இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் தற்போது அவர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் ஜயவீர கூறியுள்ளார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்த 12 ஆம் திகதி கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, நடந்த கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியிடப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

சம்பிக்க ரணவக்கவும் திலித் ஜயவீரவும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனினும் அவர்கள் வெவ்வேறு மாணவர் சங்கங்கள் மூலம் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனினும் அண்மையில் இரண்டு பேரும் சந்தித்துக்கொண்ட பின்னர், ஒரே அணியில் இருந்து அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், தேர்தல் பிரசாரம் தொடர்பான பொறுப்புகள் திலித் ஜயவீரவுக்கு வழங்கப்படும் என தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், முழுமையான ஆதரவை வழங்குவதாக திலித் ஜயவீர கூறியுள்ளார்.

அதேவளை அமைச்சர் சாகல ரத்நாயக்க அரசியலுக்கு வந்து 20 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விருந்தில், திலித் ஜயவீர கலந்துகொண்டார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்திலில் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதுடன் ஜயவீர அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com