தீர்க்கமான முடிவெடுக்க முடியாத நிலையில் மகிந்த!

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது சம்பந்தமாக பல சிக்கல்கள் ஏற்படடுள்ளதன் காரணமாக, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரை சுற்றியிருக்கும் அரசியல் கட்சிகள் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாது சிரமமான நிலைமையில் இருப்பதாக தெரியவருகிறது.

கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை சம்பந்தமான பிரச்சினை, அவருக்கு எதிராக மூன்று நீதிபதிகளை கொண்ட மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறுவதில் காணப்படும் சிரமம் ஆகியன இந்த சிக்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தேவையான ஆவணங்களை வழங்கியுள்ள போதிலும் அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், குடியுரிமையை இரத்துச் செய்வது தொடர்பில் அமெரிக்காவின் பதில் கிடைப்பது தாமதமாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உள்ளது. வழக்கை தொடர்ந்து விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.

இதன் காரணமாக சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் சமல் ராஜபக்சவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் எனக் கூறியுள்ளனர்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான மனநிலை சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களில் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான வடக்கின் அரசியல் தலைவர்கள் சிலரின் ஊடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற மகிந்த ராஜபக்ச தரப்பு முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தன்னை தெரிவு செய்தால், அதனை ஏற்க தயாராக இருப்பதாக பசில் ராஜபக்ச தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்சவுக்கு போல் வழக்கு போன்ற சிக்கல்கள் இல்லை என்பதால், அமெரிக்க குடியுரிமையை தன்னால் மூன்று வாரங்களில் இரத்துச் செய்ய முடியும் என பசில் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்ய முடியாமல்இருப்பது பிரச்சினைக்குரியது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் சிலர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைவில் கலந்துரையாடுவதாக மகிந்த ராஜபக்ச, இந்த தலைவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

மண மேடை அமைத்த பின்னர் மணமகள் பற்றி சிந்திக்க முடியாது என்பது போல், வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இல்லாத சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்க முடியாது என தாம் மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com