மைத்திரி அரசியலமைப்புச் சட்டத்தை ஐந்து சதத்திற்கும் மதிக்கவில்லை : சரத் பொன்சேகா

0

நாட்டின் ஆட்சியாளர் அரசியலமைப்புச் சட்டத்தை ஐந்து சதத்திற்கும் மதிக்காது ஜனநாயகத்தை அழிக்கும் வேலைகளை செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கும் இங்கும் நபர்களை பொறுக்கி எடுத்து 113 பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக கூறுவாராயின் 113 பெரும்பான்மை பலம் இன்றியே நாட்டின் ஆட்சியாளர் தற்போது பிரதமரை நியமித்துள்ளார். எனினும் இதுவரையிலும் அவர்களுக்கு 113 பேரின் ஆதரவு கிடைக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரி எனவும் அவர் வெற்றி பெற்றிருந்தால், நான் 6 அடி நிலத்திற்கு கீழே இருந்திருப்பேன் எனக் கூறிய மைத்திரிபால சிறிசேன, தற்போது மகிந்த ராஜபக்சவை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார். எனின், சிறிசேன அப்போது பொய் கூறியிருக்கலாம்.

மகிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும். மகிந்த ராஜபக்ச தான் கட்டியெழுப்பிய அரசியலை அழிக்கும் சிறிசேனவின் அரசியலமைப்பு விரோத செயல்களுக்கு உதவக் கூடாது.

ஹெஜிங் உடன்படிக்கையால் நாட்டுக்கு 76 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது. கிரேக்க மத்திய வங்கியில் 7 பில்லியன் ரூபாய் பிணை முறியில் முதலீடு செய்யப்பட்டது.

அப்போது எவருமே இதனைப் பற்றி பேசவில்லை. இவையனைத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலே நடைபெற்றிருந்தன. ஆனால் மைத்திரிபால சிறிசேன இவை பற்றி எதுவும் பேசுவதில்லை.

பெயர் பெற்ற பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் சிலர் உள்ளனர். இவர்களில் சிலர் கடந்த காலத்தில் அப்பாவியாக வாழ்க்கை வாழ்ந்தவர்கள். மாகந்துரே மதுஷ் என்ற ஒருவர் இருக்கின்றார். அவர் ஓட்டிய சைக்கிள் காலில் மோதியது என்று மாகாண சபை உறுப்பினர் ஒருவர் நகருக்கு மத்தியில் வைத்து மதுஷை தாக்கியுள்ளார்.

இதன் பின்னர் வீட்டுக்கு சென்று வானை நோக்கி சுட்டு, கொலை செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார். இதன் பின்னர் மதுஷ் என்ற அந்த இளைஞன் கல்கட்டாஸ் துப்பாக்கியை எடுத்துச் சென்று துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

தற்போது அவர் பிரபலமான பாதாள உலக தலைவர். பாதாள உலக தலைவர்கள் இப்படிதான் உருவாக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சரத் பொன்சேகா பாதாள உலக தலைவர்களுடன் பேசியதாக கூறுமாறு, இவர்கள் பாதாள உலக தலைவர்களிடம் கூறியுள்ளனர்.

இதற்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். பாதாள உலக தலைவர்களுக்கு 3 ஆயிரம் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் பணத்தை கொடுத்து எம்மை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர்.

சிறை சோறு சாப்பிட்டு எமக்கு பழக்கம் இருக்கின்றது. அநீதியான வேலைகளை செய்பவர்களின் இருப்பு நிரந்தரமல்ல. இவற்றை எதிர்க்கொள்ள எமக்கு பலம் இருக்கின்றது எனவும் சரத பொன்சேகா இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com