ஒகியின் தாண்டவத்தால் வெள்ளத்தில் மூழ்குமா சென்னை

0

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒகி புயல், தற்போது தமிழகத்தின் கரையோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒகி புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முற்றாக செயலிழந்துள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது.

பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதன் காரணமாக பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க இதுவரையில், மழைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

2017ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஏற்படவுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கை மற்றும் தமிழகம் பெரும் பாதிப்புகக்கு முகங்கொடுக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றம் அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளில் உயிரிழப்புக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஒட்டுமொத்த நகரும் வெள்ளத்தில் மூழ்கிப் போனது. கோடிக்கணக்கான சொத்துக்களை சேதமடைந்தன.

இந்நிலையில் மற்றுமொரு பேரிடருக்கு தமிழகம் முகங்கொடுக்க வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அரபிய கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் தீவிரமடைந்து புயலாக மாற்றமடைந்து வருவதாக வனிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒகி புயலின் தாக்கம் காரணமாக இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் வரவுள்ள சாகர் புயலின் தாக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒகி புயலின் கோர தாண்டவத்தின் காரணமாக இலங்கையில் 11 பேரும் தமிழகத்தில் 8 பேரும் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், சாகர் புயலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க இடர்காப்பு மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் தமிழகத்தை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழக மக்களை வானிலை மையம் கேட்டுள்ளது. எனினும் அடுத்து வரும் சில தினங்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com