Wednesday , September 30 2020
Breaking News

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இரண்டு இராணுவ அதிகாரிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.

2009 ஓகஸ்ட் 22ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் எரந்த பீரிஸ் மற்றும் கோப்ரல் உடகெதர ஆகியோர், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

தாங்கள் கிரித்தல இராணுவ முகாமின் கடிதங்களை பெற்றுக் கொள்வதற்காகவே, முகாமில் இருந்து கொழும்புக்கு வந்திருந்ததாக அவர்கள் இந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல், திலீப் பீரிஸ், கடிதங்களைச் சேகரிப்பதற்காக மேஜர் எரந்த பீரிஸ், கோப்ரல் உடகெதர ஆகியோர் கொழும்புக்கு வந்தமைக்கான எந்த பதிவுகளும் இராணுவ பதிவேட்டில் இல்லை என்று கூறினார்.

மேலும், இரண்டு மனுதாரர்களுக்கும் எதிராக ஹோமகம மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்னர் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், தொலைபேசி உரையாடல் பதிவுகளும் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், பிரதி சொலிசிற்றர் ஜெனரல், திலீப் பீரிஸ் கூறினார்.

இதையடுத்து. இராணுவ அதிகாரிகளின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்த மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *