Friday , September 25 2020
Breaking News

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீரழிந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிக்கை.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் சீரழிந்திருப்பதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப்பினால், சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையிலேயே இலங்கையில் மனித உரிமை நிலைமை சீரழிந்திருப்பதை காண முடிவதாக, கூறப்பட்டுள்ளது.

அத்துடன்,சர்ச்சைக்குரிய உயர்மட்ட நியமனங்கள்" உள்ளிட்ட விடயங்கள் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான இலங்கையின் உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் குறிப்பாக, சட்ட மற்றும் நிலைமாறு கால நீதி தொடர்பாக பணியாற்றுபவர்கள் கண்காணிக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தப்படுவது குறித்த அறிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகங்களுக்கு இடையிலான பதற்றங்கள், சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுவது போன்ற சம்பவங்களின் அதிகரிப்புடன், 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒட்டுமொத்த மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி அளித்த உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்றும் பிரித்தானிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரில், லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படைப் பிரிவுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறித்து பிரித்தானியா மற்றும் ஏனைய
சர்வதேச பங்காளிகள் கவலை வெளியிட்டமை குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நியமனம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை கேள்விக்குள்ளாக்கியது, என்றும் பிரித்தானிய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *