Thursday , September 24 2020
Breaking News

நேற்றும் 13 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு – கந்தகாடு நிலை இன்னமும் உறுதியில்லை.

கந்தகாடு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், இதனுடன் தொடர்புடைய மேலும் 9 தொற்றாளர்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9 பேர கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதால், குண்டசாலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

ஏனைய ஐவரும் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இதையடுத்து இலங்கையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2687 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கந்தகாடு தொற்று கொத்தணியில் இருந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 540 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது, கொரோனா தொற்றாளர்கள் 669 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 358 பேர் கந்தகாடு சிகிச்சை நிலையத்திலும், 85 பேர் வெலிகந்த தள வைத்தியசாலையிலும், 67 பேர் தொற்று நோய்கள் தடுப்பு தேசிய நிறுவகத்திலும், 62 பேர் பனாகொட இராணுவ வைத்தியசாலையிலும், 46 பேர் காத்தான்குடி தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய 90 வீதமானோர் கண்டறியப்பட்டு, வீடுகளிலோ தனிமைப்படுத்தல் நிலையங்களிலோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 1000 பேர் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கான பிசிஆர் சொதனை முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

மேலும் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களைப் பார்வையிட வந்த 116 பேருடன் தொடர்பினை வைத்திருந்த 378 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் நிலைமையை தென்கொரியா அல்லது அமெரிக்காவுடன் ஒப்பிட வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், இது தொடர்பாக பரப்பப்படும் பல்வேறு செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *