Wednesday , September 30 2020
Breaking News

அரசியல் கைதிகள் விடுதலைக்கு கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு.

நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு- உடுத்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டமைப்பு நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் பேரம் பேசவேண்டிய நேரத்தில் பேரம் பேசி, அரசியற் கைதிகளை விடுவித்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதும் கூட தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சட்ட ரீதியாக கட்டமைப்புக்களை உருவாக்கி செய்யக் கூடிய எல்லா வழிமுறைகளையும் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும், ஜனாதிபதியுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா சபை, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இதுதொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்.என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அவர்களின் உறவுகளையும், உள்ளடக்கிப் போராட்டங்களை நிலத்திலும் புலத்திலும் விரிவுபடுத்தி போராட்ட வடிவங்களை விரிவுபடுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *