Saturday , September 26 2020
Breaking News

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது – அமெரிக்க இராஜாங்கச் செயலர் கருத்து.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க- சீன முரண்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

இதையடுத்து, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதேவேளையில் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறது.

இந்தநிலையில் உலகத்துக்கு எதிராக சீனா முன்வைத்துள்ள சவாலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ, தெரிவித்துள்ளார்.

“சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த சவாலுக்கு எதிராக உலகம் பதிலடி தரும் நேரம் வந்துவிட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் அச்சுறுத்தலை புரிந்து கொண்டுள்ளன.
அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கும், சுதந்திரத்தை நேசிக்கும் மக்களுக்கும், நம் அனைவருக்கும் எதிராக சீனா முன்வைக்கும் சவாலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம்.

கடந்த 40 ஆண்டுகளாக அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் வேறு வழியின்றி அமெரிக்காவை சீனா பலவீனப்படுத்த அனுமதித்தன. ஆனால் இனி அது நடக்காது என ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவுக்கு தப்பி வந்த ஹொங்கொங்கைச் சேர்ந்த மருத்துவர் யான் லிமெங்கின் கூற்றுப்படி கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பாகவே அது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பதை சீன அரசு அறிந்திருந்தது.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க தேவையான அறிவை உலகிற்கு மறுப்பதற்கான முயற்சியில் உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு ஒத்துழைத்தது.

இதை மூடிமறைத்ததற்காக சீனாவை பொறுப்பேற்க வைக்க, உலகம் ஒன்றுபடும் என்று நான் நம்புகிறேன்.” என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *