Friday , September 25 2020
Breaking News

பலாலியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய குளத்துக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்.

தமிழ் மக்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை உள்ளடக்கிய பலாலிப் பெருந்தளப் பகுதியில், இராணுவத்தினரால் புதிதாக குளம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,

பலாலி படைத் தளப் பகுதியில் படையினரின் தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கும் நோக்கில் புதிதாக குளம் ஒன்றை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினர் உருவாக்கியுள்ளனர்.

துருசுக் கதவு, நீர் வழிந்தோடும் பாதை ஆகியவற்றுடன் இந்தக் குளத்தைச் சுற்றி நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குளத்துக்கு ரவிந்து வாபி என்று சிங்களப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவின் வழிகாட்டலின் கீழ் இந்தக் குளத்தை இராணுவத்தின் 10 ஆவது களப் பொறியியல் றெஜிமென்டும், 5 ஆவது பொறியியல் சேவைப் படைப்பிரிவும் இணைந்து அமைந்துள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் கூறுகின்றன.

இரண்டு நாட்கள் பயணமாக யாழ்ப்பாணம் வந்திருந்த இராணுவத் தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் இந்தக் குளத்தை திறந்து வைத்துள்ளார்.

ரபிந்து வாபி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் குளத்தின் நினைவுக்கல்லை திறந்து வைத்து இராணுவத் தளபதி மரக்கன்று ஒன்றையும் நாட்டியுள்ளார்.

900 மீற்றர் சுற்றளவைக் கொண்ட இந்தக் குளம் 65 கனஅடி மழைநீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரால் பல்வேறு இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக குளம் ஒன்றுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *