Monday , September 28 2020
Breaking News

சமநிலையை நோக்கி நகரும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டின் காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே
இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பந்து வீச்சில் ஈடுபட்டனர்.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 எடுத்தது.

இதையடுத்து, 182 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர்.
3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ஓட்டங் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த சக் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 219 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

ஆனால், டெஸ்ட் போட்டியில் நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால் இப்போட்டி சமநிலையில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேவேளை, முன்னதாக மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரின் போது, பந்தை பளபளப்பாக்க இங்கிலாந்து வீரர் ரொம் சிப்லி எச்சிலால் தேய்த்தார்.

கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்து மீது எச்சிலைத் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்துள்ள நிலையில் அதை மீறி சிப்லி எச்சிலால் தேய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்செயலாக இது நடந்து விட்டதாக அவர் நடுவர்களிடம் விளக்கம் அளித்தார். இதனால் அவர் நடுவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அதையடுத்து நடுவர்கள் கிருமிநாசினி காகிதத்தினால், பந்தை சுத்தப்படுத்தி தொடர்ந்து பந்து வீச அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *