Monday , September 28 2020
Breaking News

தமிழ்க் கட்சிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் மூடிய அறையில் சந்தித்துப் பேச்சு.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நேற்று முன்தினம் திருகோணமலைக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திருகோணமைலையில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இந்திய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். அதேவேளை, நிலாவெளியில் உள்ள விடுதி ஒன்றில், நேற்று முன்தினம் இரவு மேலும் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இது வழக்கமாக அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் சந்திப்பே என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்திய துணைத் தூதுவருடனடான இந்தச் சந்திப்பு குறித்து இரா.சம்பந்தனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அது அதிகாரபூர்வமான சந்திப்பு அல்ல என்றும், தனிப்பட்ட முறையிலேயே அவர் தன்னைச் சந்தித்திருந்தார் என்றும் குறிப்பிட்டார். அதேவேளை, நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் இந்தச் சந்திப்புக் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், அந்தச் சந்திப்பு தொடர்பாக தான் அறியவில்லை என்றும், ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னரும், யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தம்மை சந்தித்திருந்தனர் என்றும் கூறினார்.

அது வழக்கமாக நடக்கும் சந்திப்பே என்றும், அரசியல் தீர்வு விவகாரங்கள் உள்ளிட்ட வழக்கமாக பேசப்படும் விடயங்கள் குறித்தே அந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகவும், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *