Thursday , September 24 2020
Breaking News

சமூக ஊடகங்களில் தன்மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் முறைப்பாடு.

தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, கொரானா தொடர்பான மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை போட்டியில் இருந்து நீக்கியது.

இதனை தொடர்ந்து, ஆர்ச்சர் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வந்தது.

இதனை தொடர்ந்து 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதுகாப்பு விதிமீறலால் தன் மீது சமூக ஊடகங்களில் இனவெறி தாக்குதல் செய்யும் வகையில் விமர்சனங்கள் வந்தன என ஆர்ச்சர் கூறியுள்ளார்.

“நான் குற்றம் ஒன்றும் செய்யவில்லை. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் எனக்கெதிரான இனவெறி விமர்சனங்களை சந்தித்தேன். நான் 100 சதவீதம் மனதளவில் சரியாக இருக்க வேண்டும்.

அப்படியிருந்தால் தான் என்னால் சரியாக விளையாட முடியும். நான் போட்டியில், மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசவில்லை என்றால் அது செய்தியாக போகிறது. நான் மணிக்கு 90 மைல் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசவில்லை என்றாலும் அது செய்தியாகும்.

ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும், 100 சதவீத முழுதிறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடுவேன்.

ஆனால், அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலையில், நான் விளையாட விரும்பவில்லை. நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.

இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை“ என ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *