Monday , September 28 2020
Breaking News

செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது சீனா – பதிலடி நடவடிக்கைகளால் பதற்றம் அதிகரிப்பு.

ஹூஸ்டனில் உள்ள சீன துாதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக, செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் தீவிரமடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கிய நாடான சீனா மீது, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த வைரஸ் பரவலின் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இதற்கிடையே, உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, சீன அதிகாரிகளை தண்டிக்கும் வகையில், அமெரிக்காவில் ஒரு சட்டத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்தார்.
இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில், பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாசில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு முடிவுகளை திருட சீன உளவாளிகள் முயற்சி செய்வதாக கூறி, அதற்கு உடந்தையாகச் செயற்பட்ட ஹூஸ்டனில் இயங்கி வரும் சீன துாதரகத்தை மூடுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த உத்தரவை விலக்கிக் கொள்ளாவிடின் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்த்து.
இந்தநிலையில், சீனாவின் மேற்கு பகுதியில் செங்குடுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீன வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவின் நீதியற்ற நடவடிக்கைக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று சீனா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது சீனா – அமெரிக்கா இடையில் நிலவும் சூழ்நிலையை நாங்கள் விரும்பியதில்லை. அனைத்திற்கும் அமெரிக்கா தான் காரணம் என்றும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இரு தரப்பு உறவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *