Wednesday , September 30 2020
Breaking News

வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலைகளின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிப்பு.

1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட, 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

1983ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி திருநெல்வேலியில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினரை கொல்லப்பட்டதை அடுத்து, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக இன வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1983 ஜூலை 25 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 35 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் ஜெகன் உள்ளிட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான பலர் இந்தச் சம்பவத்தில் காடையர்களால் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து, ஜூலை 27ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கள் மீண்டும் ஒரு திட்டமிட்ட படுகொலை அரங்கேற்றப்பட்டது.

முதலாவது படுகொலைகளில் உயிர் தப்பிய 18 தமிழ் அரசியல் கைதிகள் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சிறை அதிகாரிகளின் உதவியுடன் அப்போதையஅ அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

இலங்கைத் தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிறைச்சாலைகளுக்குள் இரண்டு நாட்களிலும் 53 தமிழ் அரசியல் கைதிகள், படுகொலை செய்யப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்பாக அப்போது ஆட்சியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் எந்த விசாரணைகளையும் நடத்தவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தப் படுகொலைகளும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் அடுத்து வந்த ஆண்டுகளில் தமிழ் இளைஞர்கள் அதிகளவில் ஆயுதமேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *