Tuesday , September 29 2020
Breaking News

கொழும்பு தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை

கொழும்பு தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 வயதுடைய கைதியான குறித்த தொற்றாளர், இராணுவத்தினரால் மத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த போதே தப்பிச் சென்றிருந்தார் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

“மருத்துவமனையில் இருந்து அவர் எவ்வாறு தப்பினார் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.

சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த தொற்றாளர் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததும், அவர் மக்களுடன் பழகுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்.

அவர் வைரஸைக் கொண்டு செல்லும் தற்கொலை குண்டுதாரி போன்றவர் என்பதால், அவரை தேடுவதற்காக அதிகளவு குழுக்களை ஈடுபடுத்தினோம்.

உடனடியாக அவரை கைது செய்தோம். அவர் எந்த வழியில் சென்றார், அவர் எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார் என்பது குறித்த விபரங்களை விசாரித்து வருகிறோம்.

நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது.” என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கொரோனா தொற்றாளர், ஏனைய நோயாளர்கள் உறக்கத்தில் இருந்த போது யன்னல் வழியாக, நேற்று அதிகாலை 2 மணியளவிலேயே தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *