Monday , September 28 2020
Breaking News

சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீளப்பெறும் முயற்சி தோல்வி.

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள 25 எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திடம் இருந்து மீளப் பெறும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதையடுத்து, அம்பாந்தோட்டையில் 25 பாரிய எண்ணெய் தாங்கிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் திருகோணமலை- சீனக்குடாவில் அமைக்கப்பட்ட 99 எண்ணெய் தாங்கிகள், கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துக்கு 35 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தற்போது எரிபொருள் விலை குறைந்துள்ளதால், சீனக்குடாவில் உள்ள 25 எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீளப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக இந்தியத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தப்பட்டன.

எனினும், ஐஓசி நிறுவனத்துடன் இந்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனுடன் பேசுமாறு இந்தியத் தூதுவர் கைவிரித்து விட்டார்.

இந்த நிலையில் இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் அனைத்தும் தோல்வி கண்டுள்ளதால், வேறு வழியின்றி அம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அம்பாந்தோட்டையில் 25 பாரிய எண்ணெய் தாங்கிகளை அமைப்பதற்கான நிலத்தைக் கண்டறிந்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்புதலைப் பெறும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு நிபுணர் குழுவொன்றிடம், சக்தி, மின்சக்தி அமைச்சர் மகிந்த அமரவீர கேட்டுக் கொண்டுள்ளார் என, அவருக்கு நெருக்கான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள 25 எண்ணெய் தாங்கிகளை புனரமைப்பதற்கு 2000 மில்லியன் ரூபா தேவைப்படும் என்றும், இந்தப் பணிகள் முடிவடைய 36 மாதங்கள் செல்லும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

எனவே தான் அம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *