Tuesday , September 29 2020
Breaking News

வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரை அழைத்தால் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும் – விக்னேஸ்வரன் அச்சம்.

வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரை அழைத்தால் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் மற்றும் சுவிஸ் தூதுரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியான சிடோர்னியா கபிரியேல் ஆகியோர் நேற்றுக் காலை, சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிராம சேவகர்களுடன் இணைந்து மூன்று இராணுவத்தினரையும் பணியில் அமர்த்தவுள்ளதாக கூறப்படும் திட்டத்தினால், வருங்காலத்தில் சிவில் நிர்வாகத்தை இராணுவத்தினரே கையாளுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்தச் சந்திப்பின் போது விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏ -9 வீதியில் சுமார் 20 இடங்களில் இராணவத்தினரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து சுவிஸ் தூதுவரிடம் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான செயற்பாடுகளின் மூலம், மக்களை அச்சுறுத்தி வாக்களிக்கச் செல்லாமல் தடுக்க அரசாங்கம் முனைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், குறிப்பிட்டார்.

கொரோனாவிற்குப் பயந்தே மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றும் அவர்கள் காரணம் கூறக் கூடும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல் என்று சுட்டிக் காட்டிய வடக்கின் முன்னாள் முதல்வர், 5 ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தாலும், மறுநாள் காலையே வாக்குகள் எண்ணப்படுவதால், இரவில் வாக்குப் பெட்டிகளுக்கு என்ன நடக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வாக்குப் பெட்டிகளுக்கு இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு அழைத்தால் கட்டாயம் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே, எந்தக் காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை களமிறக்கியிருப்பது ஏன் அறிந்து கொள்வது முக்கியமானது என்றும் அவர் சுவிஸ் தூதுவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *