Monday , September 28 2020
Breaking News

மான்செஸ்டர் டெஸ்ட் நான்காவது நாள் ஆட்டம் ரத்து – இங்கிலாந்து அணி ஏமாற்றம்.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் இங்கிலாந்து அணியின் வெற்றிக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ஓட்டங்கள் குவித்தது.
இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன் பின்னர், இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இங்கிலாந்து அணி 398 ஓட்டங்கள் முன்னிலை பெற்று, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

399 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-வது நாள் ஆட்டத்தில் 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. நேற்று 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டித் தொடரை வென்று விடலாம் என்று இங்கிலாந்து எண்ணியிருந்தது.
ஆனால் நேற்று காலையில் இருந்தே மழை பெய்ததால், நடுவர்கள் 4-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இன்றும் மழை பெய்தால் இங்கிலாந்து அணியின் வெற்றிக் கனவு தகர்ந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *