Saturday , September 26 2020
Breaking News

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா – 4 ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும், அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளா் சந்திப்பில், அவா் கூறினார்.

“கடந்த 7ம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 208 பேருடன் தங்கியிருந்த ஒருவர், கடந்த 22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அன்று மாலையே 7ம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டார்.

மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு, நேற்று மாலை நடத்தப்பட்ட பீ.சி.ஆா் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது.
குறித்த நபா் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும் நேரடியாக தொடா்புகளை பேணினாரா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதையடுத்து, நபா் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய 4 உத்தியோகஸ்த்தா்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தா்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கான பரிசோதனைகள் எதிர்வரும், 31ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் பாதுகாப்பு அங்கிகள், முக கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபா் பரிசோதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவா் என்ற அடிப்படையில் கையுறை, முக கவசம் அணிந்துள்ளதுடன் சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனா்.
எனவே, யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவா்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.
எனினும் இந்த நோய் பரவும் வேகம் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *