Wednesday , September 30 2020
Breaking News

பிரதமர் நியமித்த தொல்பொருள் ஆலோசனை குழுவிலும் இடமில்லை – தமிழ்பேசும் மக்கள் கடும் அதிருப்தி.

சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்படாத கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியை ஜனாதிபதி நியமித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அதேவிதமான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமரின் ஊடகப் பிரிவு நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான உதவிகளை வழங்குவதற்காக, பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று 20 பேர் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்வில் இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திருத்தச்சட்டத்தின் கீழ் இந்த ஆலோசனைக் குழுவுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் இடங்கள் குறித்த, சிறப்புத் திட்டங்கள், கொள்கை வகுப்பு, தொல்பொருள் இடங்களைக் கண்காணிப்பது மற்றும் அபிவிருத்த செய்வது ஊக்கவிப்பது போன்ற தொடர்பாக இந்த ஆலோசனைக்குழு அமைச்சருக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள 20 பேர்ல் 9 பேர் பௌத்த பிக்குகளாவர். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான,வெண்டருவே உபாலி தேரர், மத்தரம்ப ஹேமரத்ன தேரர், பல்லுகம ஹேமரத்ன தேரர், எல்லாவெல மேதானந்த தேரர், அலிகெவெல சீலாரத்ன தேரர், யட்டிகலொலுவே விமலரத்ன தேரர், பஹமுனெ சிறி சுமங்கல தேரர், பேராசிரியர் இந்துரகரே தர்மரத்ன தேரர், மாதுரஓய தம்மசார தேர்ர் ஆகிய பெளத்த பிக்குகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், தொல்பொருள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கலாநிதி சிரான் தெரனியகல, பேராசிரியர் குலதுங்க, கலாநிதி காமினி விஜேசூரிய, பேராசிரயர் நிமல் டி சில்வா, பொறியாளர் கெமுனு சில்வா, பேராசிரியர்கள் அனுர மனதுங்க, ராஜ் சோமதேவ, முனிதாச பத்மசிறி ரணவீர, W.M.S. வீரசெகர, சிறிமல் லட்டுசிங்க, அஸ்லி டி வாஸ் ஆகியோரும் இந்த ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி நியமிக்கப்பட்டது. இதில் பௌத்த பிக்குகள், படை அதிகாரிகள் உள்ளிட்டசிங்கள பௌத்தர்கள் மாத்திரம் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவில் தமிழ்ப் பிரதிநிதிகள் சேர்க்கப்படுவர் என்று அரசாங்கம் உறுதியளித்ததாக கூறப்பட்ட போதும், இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ள 20 பேர் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவிலும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *