Saturday , September 26 2020
Breaking News

மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் – பிந்திய கருத்துக் கணிப்புகளால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், மீண்டும் தொங்கு நாடாளுமன்றமே அமையலாம் என்று பிந்திய கருத்துக்கணிப்புகள் கூறுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

இன்றும் நாளையுமே பிரசாரம் செய்ய முடியும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆளும் பொதுஜன பெரமுன, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தருமாறு நாட்டு மக்களிடம் கோரி வருகின்ற போதும், கடந்த முறையைப் போலவே தொங்கு நாடாளுமன்றமே இம்முறையும் அமையலாம் என்று கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.

பிந்திய கருத்துக் கணிப்புகளில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், பொதுஜன பெரமுனவினால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்படக் கூடும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவே அதிகளவு ஆசனங்களைப் பெறக் கூடிய நிலையில் இருப்பதாகவும், கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன 106 ஆசனங்களை வெற்றி கொள்ளலாம் என்றும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 80 ஆசனங்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி 18 ஆசனங்களையே கைப்பற்றும் என்றும், கூறுகின்ற இந்தக் கருத்துக்கணிப்புகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 15 ஆசனங்கள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளன.

ஜேவிபி 3 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 3 ஆசனங்களையும் கைப்பற்றும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனால், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெற முடியாத நிலை ஏற்படலாம் என்றும், செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *