Thursday , September 24 2020
Breaking News

இன்று நள்ளிரவுடன் முடிகிறது பிரசாரம் – உச்சக்கட்ட வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் பிரசாரங்கள் முடிவுக்கு வரவுள்ளால் அரசியல் கட்சிகள் இன்று தமது இறுதிக்கட்டப் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளன.

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரசாரத்தையும், மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு கண்டிப்பாக அறிவித்துள்ளது.

அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாகவோ, நேரடியாகவோ, வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பொது இடங்களில் உள்ள தேர்தல் பிரசார பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் இன்று தமது உச்சக்கட்டப் பிரசாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி போன்ற கட்சிகளும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று வவுனியா,கிளிநொச்சி மாவட்டங்களிலும்,, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளிலும் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் தமது இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களை கொழும்பிலேயே நடத்தவுள்ளன.
எனினும், ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதி பிரசாரக் கூட்டம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாலதுவ என்ற இடத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவர் இன்று தீவிர பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி தேர்தல் பிரசாரப் பேரணி, இன்றிரவு 8 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெறவுள்ளது, இதில் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம், கொழும்பு மத்திய பகுதியில் இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில் பிரசாரக் கூட்டமும் இன்று அனுரகுமார திசநாயக்கவின் தலைமையில் மாளிகாவத்தையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *