Wednesday , September 30 2020
Breaking News

ஐபிஎல் நிறைவேற்றுக்குழு இன்று கூடுகிறது – போட்டியை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயும்.

போட்டி அட்டவணை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஐ.பி.எல். நிறைவேற்றுக் குழு இன்று கூடவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர், துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்ரெம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தப் போட்டியை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், போட்டி அட்டவணையை இறுதி செய்வதற்காக ஐ.பி.எல். நிறைவேற்றுக் குழு இன்று வீடியோ கொன்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளது, இதில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டாலும், அது உடனடியாக வெளியிடப்படாது என்று கூறப்படுகிறது.

எனினும், அணி நிர்வாகிகளுக்கும், போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கும் போட்டி அட்டவணை அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது, அத்துடன், சீன நிறுவனத்தின் அனுசரணையை தொடர்ந்து வைத்திருப்பதா என்பது குறித்தும் இன்று விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் ஐ.பி.எல். போட்டி நடக்கவிருப்பதால் வீரர்கள் மற்றும் போட்டியில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 240 பக்கங்களைக் கொண்ட பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் தயாராகி வருகிறது.

அது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போட்டியின் போது எந்த வீரராவது கொரோனா தொற்றுக்குள்ளானால் அந்த அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சோதனை நடத்த வேண்டி வரும். அத்தகைய நிலைமையில் அந்த அணிக்குரிய அடுத்த ஆட்டம் ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பம் உள்ளது.

இதுகுறித்தும் ஏனைய பல்வேறு சிக்கல்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் வரிவாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *