Wednesday , September 30 2020
Breaking News

தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு – இறுதி நாளில் அரசியல் கட்சிகள் கடும் பிரசாரம்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், பிரசாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.

தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்திருப்பதாகவும், இன்றும் நாளையும் கடைப்பிடிக்கப்படும் அமைதிக்காலத்தில் எந்த பிரசாரஙகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று எல்லா அரசியல் கட்சிகளும் பெரியளவிலான பிரசாரக் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டியிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சியிலும், நல்லூர் சங்கிலியன் பூங்கா ஆகிய இடங்களில் பாரிய கூட்டங்களை நடத்தியிருந்த்து. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நேற்று மாலை பருத்தித்துறையில் பாரிய தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை கல்வியங்காட்டில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று மாலை இறுதிக்கட்டப் பிரசாரமாக திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி சண்டிலிப்பாயில் இறுதிப் பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கின் ஏனையபகுதிகளிலும் பெரியளவிலான பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
அதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதி பிரசாரக் கூட்டம் மாத்தறையில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்டவை கொழும்பில் இறுதி பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடந்து முடியும் வரை எந்த வொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாகவோ, நேரடியாகவோ பிரசாரங்களை மேற்கொள்ள முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களின் உள்ள தேர்தல் விளம்பரங்களை அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்கள் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ள போதும், இணையத்தளங்களில் இன்று காலையிலும் தேர்தல் விளம்பரங்கள் வெளியாகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *