Monday , September 28 2020
Breaking News

இந்திய அரசியல் தலைவர்களை துரத்தும் கொரோனா – அமித் ஷா, எடியூரப்பா, தமிழக ஆளுநருக்கும் தொற்று.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர், கர்நாடக மாநில முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவருமான எடியூரப்பாவுக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்தார்.

இந்நிலையிலே, அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்களின் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் சில நாட்களாக தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றுமாறும் அவர் கேட்டுள்ளார்.

அதேவேளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கடந்த வாரம் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதிசெய்ய்யப்பட்டிருந்த்து

இதையடுத்து, ஆளுநரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், சோதனை செய்து பார்த்தேன். பரிசோதனை அறிக்கை மீண்டும் நேர்மறையாக வந்தது.

எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *