Monday , September 28 2020
Breaking News

போலி ஆவணங்களின் மூலம், அங்கொட லொக்காவின் சடலத்தை எரித்த இரண்டு பெண்கள் கைது.

போலி ஆவணங்களின் மூலம், அங்கொட லொக்காவின் சடலத்தை எரித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை கோயம்புத்தூர் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி என்பவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையையும் வழங்கியுள்ளார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த பீளமேடு பொலிசார், பிரேத பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, ஆகிய இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போதே, உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் பாதாள உலக குழுவின் தலைவரான இவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. பெங்களூருவில் மறையிருந்த இவர், கடந்த மார்ச் மாதம் கோவைக்கு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கோவை சேரன் மாநகரில் வீடு எடுத்து, அமானி தான்ஜி உடன் தங்கியுள்ளார். அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோர் தமது உண்மையான பெயர் மற்றும் குடியுரிமையை மறைத்து, ஆதார் அட்டை பெற போலி ஆவணங்களை வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அங்கொட லொக்கா இறந்ததை அடுத்து, சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி, மற்றும் இவர்களுக்கு உதவிய தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் கோவை பீளமேடு பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த அங்கொட லொக்காவின் பிரேத பரிசோதனையில், அவரின் காயச்சான்றை பெற, பொலிசார் முயற்சித்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததாக காயச்சான்றிதழில் தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தவும் பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக அங்கொட லொக்கா, இன்னொரு தாதாவின் மனைவியால் விசம் வைத்து கொலை செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *