Friday , September 25 2020
Breaking News

அங்கொட லொக்கா எனப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனின் மரணம் – சிபிசிஐடி விசாரணை

கோவையில் மரணமான அங்கொட லொக்கா எனப்படும் இலங்கையின்
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனின் மரணம் தொடர்பான,
விசாரணைகள் சிபிசிஐடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அங்கொட லொக்கா, இலங்கையில் பிரபல ரவுடியாகவும், போதைப்பொருள் கடத்தல்
கும்பலின் தலைவனாகவும் வலம் வந்தவர்.

கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்ட அவர் இலங்கையில் இருந்து
தப்பிச் சென்று கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் கோவையில் வசித்து
வந்துள்ளார்.

இவருடன் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, என்ற பெண் தங்கியிருந்துள்ளார்
என்றும், கடந்த, இரண்டாண்டுகளில் அங்கொட லொக்காவை சந்திக்க அவர் மூன்று
முறை கோவைக்கு வந்து சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இவர் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் அங்கொட லொக்காவுடன் கோவையில்
தங்கியிருந்துள்ளார்.

அங்கொட லொக்காவுக்கு மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி என்ற சட்டத்தரணி, தனது
வீட்டில் மூன்று மாதம் அடைக்கலம் கொடுத்துள்ளதுடன், திருப்பூரை சேர்ந்த
தியானேஸ்வரன் என்பவர் மூலம், பிரதீப்சிங் என்ற பெயரில் திருப்பூர் முகவரியில் போலி
ஆதார் அட்டையையும் பெற்றுக் கொடுத்துள்ளார் என தகவல்கள்
கூறுகின்றன.

கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் உலாவிய அங்கொட லொக்கா கடந்த ஜூலை
4 ம் திகதி , மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து, அம்மானி தான்ஜி, சட்டத்தரணி சிவகாமி சுந்தரிக்கு தகவல்
தெரிவித்துள்ளார்.

கோவை வந்த சிவகாமி சுந்தரி, உயிரிழந்தவர் தனது பெரியப்பா மகன் என பொலிசாரிடம்
தெரிவித்து, போலி ஆதார் அட்டையை கொண்டு, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர்
சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இதன் பின்னர் சந்தேகமடைந்த பொலிசார் விசாரணையில் மேற்கொண்டு அம்மானி
தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் மூவரையும்
சிறையில் அடைப்பதற்காக நீதிமன்றத்துக்கு பொலிசார் அழைத்து சென்றபோது கர்ப்பமாக
இருந்த அம்மானி தான்ஜிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கரு கலைந்ததை அடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற
இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச அளவில், இந்த வழக்கு செல்வதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி.,
க்கு மாற்ற கோவை மாநகர பொலிசார் டி.ஜி.பி., திரிபாதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து வழக்கை சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி டி.ஜி.பி., திரிபாதி நேற்று மாலை
உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் மற்றும் அதிகாரிகள் வழக்கு குறித்த தகவல்களை கோவை மாநகர
பொலிசாரிடமிருந்து பெற்றுக் கொண்டு அங்கொட லொக்கா மரணம் குறித்து வழக்கு பதிவு
செய்து விசாரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *