Friday , September 25 2020
Breaking News

கடந்த பொதுத் தேர்தலை விட இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமானோர் வாக்களிப்பு

நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த பொதுத் தேர்தலை விட அதிகமானளவு வாக்களிப்பு இடம்பெறுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் உள்ளிட்ட 67.72 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், 61.56 வீத வாக்குகளே பதிவாகிய நிலையில் இம்முறை சுமார் 6 வீதம் வாக்களிப்பு அதிகரித்துள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், 71.89 வீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை 74 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பொதுத் தேர்தலில் 69.12 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்முறை அங்கு 76 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும், இந்த மூன்று மாவட்டங்களிலுமே, கடந்த 2015 பொதுத் தேர்தலை விட அதிகளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில், 2015 பொதுத் தேர்தலில், 74.34 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இம்முறை 74 வீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில், இம்முறை 73 வீத வாக்குகள் பதவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2015 பொதுத் தேர்தலில், 73.99 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *