Monday , September 28 2020
Breaking News

விருப்பு வாக்கு விவகாரத்தினால் யாழ். மாவட்ட செயலகத்தில் நள்ளிரவில் குழப்பம் – சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறினார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து, நள்ளிரவுக்குப் பின்னர், குழப்ப நிலை ஏற்பட்டதுடன், அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மீது பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று ஆசனங்களே கிடைத்திருந்தன. இதில், அதிகளவு விருப்புவாக்குகளை சிறிதரன் பெற்றிருந்தார்.

இதையடுத்து, அடுத்த நிலையில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றது யார் என்பதில், சசிகலா ரவிராஜ், சித்தார்த்தன் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

சசிகலா ரவிராஜ் முன்னிலை பெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், சித்தார்த்தனுக்கும் சுமந்திரனுகும் இடையில் மூன்றாவது ஆசனத்துக்காக கடும் போட்டி நிலவியது.

இதையடுத்து, மானிப்பாய் தொகுதி வாக்குகளை மீள எண்ணுமாறு சுமந்திரன் தரப்பு கோரியதை அடுத்து, மீள்வாக்கு எண்ணிக்கை இடம்பெற்றது.

இதையடுத்து, சுமந்திரன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றதாகவும், சித்தார்த்தன் மூன்றாவது வேட்பாளராக வெற்றி பெற்றதாகவும்  தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் மோசடி இடம்பெற்றது என தெரிவித்து யாழ்ப்பாண மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் கூடியிருந்த, சசிகலா  ரவிராஜ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த சுமந்திரனுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது அவர் மீது போத்தல் என்று வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுமந்திரனின் பாதுகாப்புக்கு வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் பொலிசாரும் கைகளாலும் கால்களாலும் அடித்து விரட்டினர்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் உளிட்ட சிலர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களும், அதிரடிப் படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று அதிகாலை இதுகுறித்து சசிகலா ரவிராஜின் மகள் பிரவினா ரவிராஜ் ருவிட்டரில் இட்டுள்ள பதிவு ஒன்றில், தமது தாயார் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார் என்றும், நான்காமிடத்தில் இருந்த சுமந்திரன் திடீரென் இரண்டாமிடத்துக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும், குறிப்பிட்டுள்ள அவர், கடைசியாக வாக்குகள் எண்ணப்பட்ட போது வேட்பாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் சுமந்திரன், சயந்தன் ஆகியோர் முன்னிலையிலேயே வாக்குகள் எண்ணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *