Monday , September 28 2020
Breaking News

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு இலங்கைக்கு பாராட்டு.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்கா, ஜப்பான், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று சவாலுக்கு மத்தியில், மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்தமைக்கு இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு, செயல்திறன் மிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கட்டியெழுப்பவும், நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என, எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான, சுதந்திரமான, நியாயமான முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதை ஜப்பான் வரவேற்பதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஜனநாயகத்தின் பாரம்பரியத்தை காட்டுகிறது என்றும், இது தேர்தலின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் இலங்கை அரசாங்கத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை, இலங்கையின் நீண்டகால நண்பனாக, இந்தியப் பெருங்கடல் மையத்தின் மையமாக உள்ள இலங்கையின்  அபிவிருத்திக்கான முயற்சிகளை ஜப்பான் தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் ஜப்பானிய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சுவிஸ் தூதுவர் ஹன்ஸ்பீற்றர் மொக், கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெற்றிகராக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்துக்கும்  வாழ்த்து தெரிவித்து செய்தி ஒன்றை ருவிட்டரில்,  பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *