Wednesday , September 30 2020
Breaking News

யாழில் ஏனைய கட்சிகள் ஆசனம் பெற்றது ஆபத்து – சுரேஷ் பிறேமச்சந்திரன்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதும், அரச பங்காளிக் கட்சிகள், வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளதும், தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும், “60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்திற்கு நாம் கொடுத்த விலை மிகமிக அதிகமானது. எமது மக்கள் பட்ட வலி சொல்லி மாளாதது. எனினும் நாமும் எமது எதிர்கால சந்ததியும் இந்த நாட்டில் தமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்கு தொடர்ந்தும் நாம் போராட வேண்டிய நிலை உள்ளது. இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல. மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும். எனவே தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும்.

அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும். இலங்கையின் ஆட்சியாளர்கள், எமது மக்கள் மத்தியில் இருக்கும் தமது முகவர்களையும் அரசை சார்ந்து தம்மை வளர்த்துக் கொள்ள முனையும் சிலரையும், பதவிகள் அதிகாரங்களைக் கொடுத்து தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த சதித் தனங்களைப் புரிந்து கொள்ளாத எமது மக்களின் ஒரு பகுதியினர் அவர்களை ஆதரிக்க முற்படுவது ஆபத்தான ஒரு விடயமாகும்.

ஏறத்தாள 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ். மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதுடன் அரச பங்காளிக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளன. தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. இவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். அடுத்து வரும்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *