Monday , September 28 2020
Breaking News

நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின் 4 பேருக்கு கொரோனா – ஆக்லாந்தில் ஊரடங்கு அமுல்.

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை, நியூசிலாந்து மிகத் திறமையாக கட்டுப்படுத்தியிருந்தது.

பெப்ரவரி மாதம் நியூசிலாந்தில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்கை தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக, நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்து வந்தவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் நாட்டின் எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் கொரோனா நாட்டுக்குள் பரவும் சங்கிலித்தொடரை தகர்த்து விட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்திருந்தார். 

கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் அங்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நியூசிலாந்து அரசு  அறிவித்திருந்தது.

இந்நிலையில், 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

ஆக்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்லாந்தில் வசித்து வந்த 50 வயது நிரம்பிய நபர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற போது, மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்ற றுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும், 3 பேருக்கு கொரோனா பரவியிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் உறுதி செய்யப்பட்ட 4 பேரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உள்ளூர்வாசிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆக்லாந்து முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

நகரம் முழுவதும் 3 ஆம் கட்ட எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளாதாகவும், நாடு முழுவதும் 2 ஆம் கட்ட எச்சரிக்கை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *