Tuesday , September 29 2020
Breaking News

அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் – சர்வதேச ஊடகங்கள்

இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்றுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுகுறித்து செய்திகளை வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகமாகியிருப்பதாக தெரிவித்துள்ளன. கண்டியில் நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தொடர்பாக ஏபி, ஏஎவ்பி, ரொய்ட்டர்ஸ், பிபிசி, பிரிஐ போன்ற பல செய்தி நிறுவனங்களும், உலகின் முன்னணி ஊடகங்கள் பலவும், முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பது குறித்தே சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோருடன், இம்முறை பிரதமரின் மகனான நாமல் ராஜபக்சவும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். நாட்டின் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளான பாதுகாப்பு, நிதி, நகர அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசார மற்றும் மத விவகாரங்கள், நீர்ப்பாசனம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய அமைச்சுக்கள் ராஜபக்ச குடும்பத்தினரின் கைகளில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், இராஜாங்க அமைச்சராக அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான சஷீந்திர ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச வம்சத்தை பலப்படுத்துகிறார் என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் இந்தச் செய்திக்கு தலைப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *