Tuesday , September 29 2020
Breaking News

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர்கள் பெயர்கள் பரிந்துரை

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, பேராசிரியர்கள் சிறிசற்குணராஜா, மிகுந்தன், வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில், திறமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளவர்கள் ஜனாதிபதியின் தெரிவுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தீர்மானிப்பதற்கான யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், நேற்று நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேரின் பெயர்கள் பேரவைக்கு முன்மொழியப்பட்டிருந்த்து.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும், உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும், மதிப்பீட்டுக்குழுவினால் முன்மொழியப்பட்டிருந்தனர். அத்துடன் முன்னாள் துணைவேந்தரும் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் முன்மொழியப்பட்டிருந்தனர்.

அதேவேளை, புள்ளிவிவரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன், மதிப்பீட்டுக் குழுவால் நிராகரிக்கப்பட்டிருந்தார். இதில், முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களான பேராசிரியர்கள் சிறிசற்குணராஜா, மிகுந்தன், வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் துணைவேந்தர் நியமனத்துக்காக பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *