Monday , September 28 2020
Breaking News

பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக எந்த தகவலும் வர்த்தமானி அறிவித்தலில் இல்லை

அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவை பதவியேற்பின் போது, பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு பொறுப்பாக அமைச்சுக்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தர வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அந்த வர்த்தமானி அறிவிப்பில் பாதுகாப்பு அமைச்சு பற்றியோ, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படுவார் என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை.

இதனால், பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தனது பொறுப்பில் வைத்திருப்பது தொடர்பான சட்டச் சிக்கல் இருப்பது உறுதியாகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 19 ஆவது அரசியலமைப்பு திருத்த்த்தின்படி, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட எந்த அமைச்சுக்களையும் வைத்திருக்க முடியாது. எனினும், தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து, ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பாக இரந்து வருகிறார். புதிய அரசாங்கத்திலும் அவரே பாதுகாப்பு அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டது.

19 ஆவது திருத்தச்சட்டத்தின்படி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியாது என்று பல்வேறு தரப்பினரும் கூறியிருந்த நிலையில், அதனை மறுத்திருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக கூறியிருந்தார். எனினும், வர்த்தமானி மூலம் அந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் அறிவிக்காத்தால், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி செயற்படுவதன் சட்டபூர்வ தன்மை குறித்த சர்ச்சை மேலும் வலுப் பெற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *