Tuesday , September 29 2020
Breaking News

வடக்கில் பிரிவினைவாதமோ, கிழக்கில் தீவிரவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் – பாதுகாப்புச் செயலாளர் வாக்குறுதி.

வடக்கில் பிரிவினைவாதமோ, கிழக்கில் தீவிரவாதமோ, நாட்டில் அச்சத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொவிட் -19 க்கு பின்னரான மறுமலர்ச்சி – இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி” எனும் தொனிப்பொருளில் “ஹரிமக அமைப்பினால்” இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த வாரத்திலும், 1.5 கிலோ உயர் ரக வெடிபொருட்கள் மற்றும் 90 டெட்டனேட்டர்களை மன்னார் பிரதேசத்திலிருந்து கைப்பற்றியுள்ளதாகவும், தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஒரு சில தொலைகட்டுப்பாட்டு கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். பராமுகமாக செயற்பட்டிருந்தால் இவற்றை மீட்டிருக்க முடியாது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத சிந்தனைகள், தீவிரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியன பாதுகாப்புக்கு முக்கிய சவால்களாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பை புறக்கணித்து ஒரு நாட்டை முன்னேற்றுவதும் அபிவிருத்தி செய்வதும் சாத்தியமற்றது எனவும், அவர் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு பிரிவினைவாதம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதும், ஒரு சில தமிழ் புலம்பெயர்ந்தோர், பிரிவினைவாத சிந்தனைக்கு தொடர்ச்சியாக நிதியுதவியளிப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் மீதமுள்ள சில அமைப்புக்கள் நிதி சேகரிக்கும் நோக்கில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பிரிவினைவாத சிந்தனையை தூண்டி அதற்கு மேலும் உரமூட்டும் வகையில் செயற்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் ஒருபோதும் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்கப்படமாட்டது என்று உறுதியளிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *