Wednesday , September 30 2020
Breaking News

நேற்று இலங்கையை இருளில் தள்ளிய மின்தடை – விசாரணைக்கு உத்தரவு

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடை குறித்து விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சக்தி மின் மற்றும் சக்தி டலஸ் அலகப் பெரும தெரிவித்துள்ளார். கரவலப்பிட்டியவில் உள்ள மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நேற்று நண்பகல் தொடக்கம் இரவு வரை நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. நேற்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடையினால், நாடு பெரும் பாலும் முடங்கிப் போனதுடன், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர். தொழிற்சாலைகள், அரச, தனியார் நிறுவனங்களில் பணிகள் அனைத்தும் தடைப்பட்டன. வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிராததால், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இணைய சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன், மின்சாரம் தடைப்பட்டதால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் நீர்விநியோகமும் தடைப்பட்டது. இதனால், குடிநீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது.

இலங்கை முழுவதும் ஏற்பட்ட இந்த திடீர் மின்சாரத் தடை நள்ளிரவுக்கு சற்று முன்னதாகவே முற்றாக சீர்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று மாலை சில பகுதிகளுக்கு மீண்டும் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போதும், வடக்கு, வட மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பின்னிரவிலேயே முழுமையான மின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென நாடு முழுவதையும் இருட்டுக்குள் தள்ளிய இந்த மின் தடைக்கான காரணங்களைக் கண்டறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமித்துள்ளதாக, சக்தி மின் மற்றும் சக்தி டலஸ் அலகப் பெரும தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று இந்த மின் தடைக்கு நாசவேலைகள் ஏதும் காரணம் இல்லை என்றும் அமைச்சர் டலஸ் அலகப்பெரும குறிப்பிட்டுள்ளார். அடுத்த 48 மணி நேரத்துக்குள் விசாரணையை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், இந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *