Monday , September 28 2020
Breaking News

சஹ்ரான் காசிம்க்கு இந்தியா புகலிடமாக இருந்தது

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிம் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருந்தது என்று, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் சஹ்ரானும் அவரது உதவியாளர்களும் பலமுறை இந்தியாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளது பற்றிய தகவல்கள் எதையும், 2019 ஏப்ரல் 4ஆம் திகதி வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பிடம் இருந்து அரச புலனாய்வுச் சேவை பெற்றுக் கொள்ளவில்லை என்றும், நிலந்த ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் சாட்சியமளித்துள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன- “தாக்குதலை நடத்துவதற்கான திறனுக்கும், தாக்குதலுக்கு தயார்படுத்தலுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. குறிப்பிட்ட வெளிநாட்டு புலனாய்வுத்துறை அறிக்கையில் சஹ்ரானின் தாக்குதலை நடத்தும் திறன் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இந்திய தூதரகம் ஒரு திட்டவட்டமான இலக்காகவும், நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மென்மையான இலக்குகளாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிநாட்டு புலனாய்வுத்துறை அறிக்கை ஒரு பெரிய பரப்பைக் கொண்டிருந்தது. முக்கியமான தேவாலயங்கள் தாக்கப்படலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

முக்கியமான தேவாலயங்கள் என்று கூறும்போது நாட்டில் 100 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. எனவே குறிப்பிட்ட புலனாய்வு அறிக்கையை நேரடியாக ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பாமல் இருக்க அரச புலனாய்வு சேவை முடிவு செய்தது. அதனால், குறிப்பிட்ட வெளிநாட்டு புலனாய்வு அறிக்கையை நாங்கள் புறக்கணித்ததாக அர்த்தமில்லை. சஹ்ரான் ஒரு குண்டை சோதனை செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. வெளிநாட்டு புலனாய்வு அறிக்கை கிடைத்த பின்னர், குண்டுப் பரிசோதனை தொடர்பான முதல் தகவல், 2019 ஏப்ரல் 17 ஆம் திகதியே கிடைத்தது” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *