Saturday , September 26 2020
Breaking News

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நிலையியல் கட்டளைகளின் படி முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அதனையடுத்து, கடந்த 5ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவார்கள். இதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் நாடாளுமன்றத்தின் அமர்வில் புதிய அரசாங்கத்தின கொள்கைகளை விளக்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவார். இந்த நிகழ்வுக்காக, பிற்பகல் 2.15 மணியளவில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களை ஒன்று கூடுமாறு நாடாளுமன்ற செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட இல்லாத முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது, அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் இந்த நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளார். இதனிடையே இன்று கூடும் 9 ஆவது நாடாளுமன்றத்தின் 223 உறுப்பினர்களில், 81 பேர் முதல் முறையாக சபைக்குத் தெரிவாகியுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் 65 பேர் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 16 பேர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தின் மிக இளவயது உறுப்பினராக, 25 வயதுடைய, ஜீவன் தொண்டமான் இடம்பெறுகிறார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான 87 வயதுடைய, இரா.சம்பந்தனே சபையின் மிக மூத்த வயதுடைய உறுப்பினராக இருக்கிறார். 9வது நாடாளுமன்றத்தில், 11 வீதம் இளைஞர்கள் இடம்பெற்றுள்ளதாக, நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில், 25 முதல் 30 வயதுக்கு 04 உறுப்பினர்களும், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட 25 உறுப்பினர்களும், உள்ளடங்கியுள்ளனர்.

இளம் உறுப்பினர்களில் 9 பேர் முதல் முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 இற்கும், 50 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்றும், 54 உறுப்பினர்கள் 51 இற்கும் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க, பட்டாலி சம்பிக்க ரணவக்க, பழனி திகம்பரம், மனோ கணேசன் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். 61 இற்கும் 70 வயதிற்கும் உட்பட்ட 37 உறுப்பினர்களும், 71 தொடக்கம் 80 வயதுக்கு இடைப்பட்ட 9 உறுப்பினர்களும் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் 81 தொடக்கம் 90 வயதுக்கு இடைப்பட்ட 3 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாகவும், இரா.சம்பந்தன், வாசுதேவ நாணயக்கார, சி.வி.விக்னேஸ்வரன், ஆகியோரே அவர்கள் என்றும் நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *