Friday , September 25 2020
Breaking News

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தொடர்ந்தும் பங்களிக்கும் என்றும், இந்திய தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் நேற்று மாலை இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு இரவு 7 மணி நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பாகவும், குறிப்பாக, பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளதற்கு, வாழ்த்துகளை தெரிவித்த, இந்திய தூதுவர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்று, உறுதியளித்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் காப்பாற்ற இந்தியா இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியத் தூதுவரிடம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது, 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று , இந்திய தூதுவர் கோபால் பாக்லே வலியுறுத்திக் கூறினார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *