Wednesday , September 30 2020
Breaking News

கஜேந்திரகுமார் சபையை தவறாக வழிநடத்துகிறார் – இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர

இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அது சரியானதே. ஆனால் அந்த இறையாண்மை நிச்சயமாக சமரசத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டில் இடம்பெற்ற போரில், போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஒட்டுமொத்த உலகமுமே கூறுகின்றது.

போர்க்குற்றத்தில் இன்றைய பிரதான கட்சி மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. எனவே இறையாண்மையை முதன்மைப்படுத்தி இந்தி விடயங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவே முடியாது. மிக மோசமான போர் குற்றங்களை எக்காரணம் கொண்டும் மறைக்க முடியாது.” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நாட்டில் எந்தவிதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்றும், கஜேந்திரகுமார் சபையை தவறாக வழிநடத்துகிறார்.

பொய்களை கூறி ஏமாற்றுகின்றார் என்றும் குற்றம்சாட்டினார். அதேவேளை, இதுகுறித்து கஜேந்திரகுமார் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரது நேரம் முடிந்து விட்டதாக கூறி, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன இராமநாதன், அவரது பேச்சை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *