Monday , September 28 2020
Breaking News

இலங்கையில் ஜனாதிபதி செயலணிகளால் சமாந்தரமான அரசு உருவாகும் ஆபத்து

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகள், ஒரு
சமாந்தரமான அரசை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக,
உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின்
வழமையான கொள்கைகளுக்கு அப்பால், அதிகாரம் மிக்க இராணுவ
மயப்படுத்தப்பட்ட செயலணிகள் ஊடாக, தன்னாட்சி அதிகாரம் உடையவர்
போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை எவ்வாறு ஆட்சி
செய்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு
விளக்கப்படமொன்றை உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம்
வெளியிட்டுள்ளது,

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான யஸ்மின்
சூக்கா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த செயலணிகள் சரியான
முறையில் மக்களால் தெரிவு செய்யப்படாதவை என்றும், இவை
நாடாளுமன்றத்தின் வழமையான ஆய்விற்கும் மேற்பார்வைக்கும்
உட்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
செயலாளர்கள் மாத்திரமன்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக்
குழுக்களும் கூட, மக்களால் தெரிவு செய்யப்படாத இந்த
செயலணிகளுக்கு கீழ்ப்படிந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்றும்,
உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

இந்த செயலணிகள் ஒரு சமாந்தரமான அரசை உருவாக்கும் ஆபத்தைக்
கொண்டிருப்பதுடன், பெரும்பாலும் ஜனாதிபதி, அவரது குடும்பம் மற்றும்
முன்னாள் இராணுவச் சகபாடிகளுக்கு ஆதரவு வலையமைப்புக்கள் மற்றும்
பொதுச்சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான இணையற்ற அதிகாரத்தை
வழங்குகிறது என்றும், யஸ்மின் சூக்காவின் இந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலணிகளின் உருவாக்கமானது, சட்டரீதியாகக் கேள்வி எழுப்பக்
கூடியதாகவும், நிர்வாக ரீதியாக இருண்டதாகவும் உள்ளதாக
இலங்கையிலுள்ள சட்டத்தரணியிகள் கூறியிருப்பதாகவும் இந்த
அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் யஸ்மின் சூக்கா, செயலணிகளுக்குக்
காலஎல்லை இல்லை என்பதுடன் அதற்கான வரைவு ஒழுங்கற்றதாகவும்,
‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாகவும்
உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *