Monday , September 28 2020
Breaking News

தேர்தலுக்குப் பின் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை அரசு வாக்குறுதி – இராஜதந்திர வட்டாரங்கள் தகவல்.

தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தை, இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை 500 மில்லியன் டொலர் செலவில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு இணக்கப்பாடு எட்டியிருந்தது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துள்ளதால் இலங்கை அரசாங்கம் இந்த திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுகுறித்து இராஜதந்திர மட்டங்களில் கொழும்புடன் புதுடெல்லி தொடர்பு கொண்டு கலந்துரையாடியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையிலேயே தேர்தலில் இந்த விவகாரம் தாக்கம் செலுத்தக் கூடும் என்பதால், தேர்தல் முடிந்த பின்னர், இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு கிழக்கு கொள்கலன்முனையத் திட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக புதுடெல்லிக்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த திட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்று இலங்கை அரசாங்க உயர்மட்டத்தினால் புதுடெல்லிக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *